மீண்டும் வரதா என எங்கும் காலங்கள்
மறுபடியும் நடக்காதா என நினைக்கும் நிகழ்வுகள்...
தோண்டத் தோண்ட அடிமனதில் வெளிப்படும் தேடல்கள்
சிறுவயதில் கல்லெறிந்து காய் பறித்த புளிய மரம்
பல ஆண்டுகள் கடந்து இன்று காணவில்லை அங்கே...
'புளியடி' இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது...
அந்தப் புளிய மரங்கள் இல்லாது...
தெருவோரத்துக் கிணறு ஒன்று
துலாவும் வாளியுமாக வீதி ஓரத்தில்...
சிறுவயதில் கல்லெறிந்து மகிழ்ந்த நாட்கள்...
கிணற்று முகப்பிலே ஒரு நீர்த் தொட்டி...
(இன்று அது சுவரொட்டி ஓட்டும் இடமாக மாறிவிட்டது)
அன்று எங்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை
மிருகங்களின் தாகம் தணிக்கவென
முன்னோர் கட்டிய தண்ணீர்த் தொட்டி...
வாய் பேசா உயிர்களின் தாகம் தீர்த்த தமிழனுக்கு
முள்ளிவாய்க்காலில் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்கவில்லை...
இறைவா...
அயலூர்தான் கந்தரோடை...
அழகான தமிழ்ப் பெயர் அது...
வழுக்கை ஆற்றின் கரயோர நகரமது
பண்டைக் காலங்களில் சோழர்கள் கப்பலிலே
வந்துபோன இடமிது...
சேது நாணயங்கள் செப்புத் தகடுகள்
பவளம் ரத்தினங்கள் அதற்கு அத்தாட்சிகள்...
ஆனால் இன்று
அதன் பெயர் 'கதுறு கொட' என்கிறது அரசு
தொல்பொருள் இடத்திலே தோண்டிய கற்களால்
'விகாரை' வடிவமைத்து வரலாறு தலைகீழ் ஆகின்றது...
ஏன் அவை இந்துக் கோவிலின் 'விமானமாக' இருக்காதா?
அரச மரமொன்று புதிதாக நட்டுவிட்டு
அங்கே 'போதி மாதவனின்' சிலையொன்றை வைத்துவிட்டு...!
எல்லாத்தையும் பார்க்க தலை சுற்றுகிறதே
எங்கு போய் சொல்ல இதை...!
பாதை தொடரும்...